மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகளின்போது கணக்கெடுப்பாளர்கள் கேட்க வேண்டிய 40 கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் வயது, கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அரசின் திட்டமிடலுக்கு துல்லியமான தரவுகளை வழங்குவதே இதன் நோக்கம். இந்த பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படுவதுடன், முதல் கட்டம் ஆகஸ்ட் 1-ல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 33 கேள்விகளுக்கான தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன், பொதுமக்கள் ஆன்லைனிலும் விவரங்களை அளிக்கும் வசதி உள்ளது.

இரண்டாம் கட்டம் லடாக், ஜம்மு-காஷ்மீரின் பனிப்பொழிவு பகுதிகள், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் பகுதிகளில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது. பிற மாநிலங்களில் இது 2027 பிப்ரவரியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட 40 கேள்விகளில் பெயர், குடும்பத் தலைவருடன் உள்ள உறவுமுறை, பாலினம், பிறந்த தேதி/வயது, திருமண நிலை மற்றும் திருமண வயது, துணையின் பெயர், நாட்டுப்பற்று, மதம், எஸ்சி/எஸ்டி விவரம், தந்தை/தாய் பெயர், மாற்றுத்திறனாளி நிலை, தாய்மொழி மற்றும் தெரிந்த மொழிகள், கல்வி/வருகைப்பதிவு/அதிகபட்ச கல்வி, கடந்த ஆண்டு வேலை செய்ததா உள்ளிட்ட வேலை-தொழில் விவரங்கள், இடம்பெயர்வு தொடர்பான தகவல்கள், நிரந்தர முகவரி, தகுதியானவர்களுக்கு குழந்தைகள் தொடர்பான சில கேள்விகள், கோவிட் தடுப்பூசி போட்ட இடம், வங்கிக்கணக்குகள் எண்ணிக்கை, மேலும் மொபைல் எண், ஆதார் (இருந்தால்), வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் (இந்தியராக இருந்தால்) மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள விவரங்களும் இடம்பெற்றுள்ளன.