சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் இருந்த சொத்து வரி மறுமதிப்பீட்டை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி கமிஷனர் சமீரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுமார் 30,000 சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட திருத்திய வரி ஆணைகளில், வரித்தொகை இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்ததாக கூறப்பட்டதையடுத்து சர்ச்சை எழுந்தது. இதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம், ‘வரி உயர்வு இல்லை; மறு சீராய்வே நடைபெற்றது’ என விளக்கம் அளித்திருந்தது.
கமிஷனர் அறிக்கையில், திருத்திய மதிப்பீடு தொடர்பாக மக்கள் எழுப்பிய கோரிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கு மட்டுமே மாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வரித்தொகை முன்பு இருந்த அளவுக்கே மாற்றியமைக்கப்படும் என்றும், ஏற்கனவே திருத்திய தொகையை செலுத்தியவர்களுக்கு அந்தத் தொகை அடுத்தடுத்த காலங்களுக்கான முன்வரியாக ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





