நீதித்துறை எந்தத் தரப்புக்கும் ஆதரவாக தீர்ப்பளிப்பதில்லை; அரசியலமைப்பின் வழிகாட்டுதலின்படியே முடிவெடுக்கிறது என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்பின் பாதுகாவலராக நீதித்துறை செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

டிடி நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறை அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்று அவர் விளக்கினார். சமத்துவம், கண்ணியம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக மாண்புகள், சுதந்திரமான நீதித்துறை உள்ளிட்ட அம்சங்களும் அடிப்படை உரிமைகளும் அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ளன என்றார்.

அரசியலமைப்பின் “அடிப்படை கட்டமைப்பை” பாதுகாப்பதும் பலப்படுத்துவதுமே நீதித்துறையின் ஆக்கப்பூர்வமான பணி என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் சூழ்நிலைகள் மாறினாலும் அந்த அடிப்படை கட்டமைப்பு மாற்றமின்றி தொடரும்; அதை மாற்ற முடியாது, மரியாதையுடன் காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வழக்குகள் நிலுவையில் இருப்பது உண்மை; அது நீதித்துறைக்கு பெரிய சவால் என்று தலைமை நீதிபதி கூறினார். பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்குகள் விரைவாக முடிவடைய வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நியாயமானது என்றும் அவர் சொன்னார்.

ஆனால் ஒவ்வொரு வழக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் வராது என்றும் அவர் எச்சரித்தார். காலவரையறை நிர்ணயிக்க வேண்டுமெனில் ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நேரக்கெடு வகுக்கலாம் என்றும் அவர் கூறினார்.