கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கப்பட உள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான, ஆரோக்கியமான வளாகங்களை உறுதி செய்வதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘நஷா முக்த் பாரத் அபியான்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டம் ஆறு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் போதைப்பொருளின் தாக்கங்களைப் புரிந்துகொள்வது, அடிமைத்தனத்தின் பின்னணியில் உள்ள அறிவியல், ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள்களை அடையாளம் காணுதல் மற்றும் தீர்வுகள், போதை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு, சட்டம் மற்றும் கொள்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த வரைவு பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், தொழில் துறை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அடுத்த 15 நாட்களுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.) தெரிவித்துள்ளது.