காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் (DVAC) நடத்திய திடீர் சோதனையில் ரூ.14.57 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஊராட்சி பெண் தலைவர் ஜெகதீஸ்வரி (42) மற்றும் அலுவலகத்தில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின் படி, மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் பெற்றுத் தருவதற்காக கட்டுமான நிறுவனங்களிடம் ஊராட்சி தலைவர் மற்றும் சில ஊராட்சி உறுப்பினர்கள் லஞ்சம் பெறுவதாக DVAC-க்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி தலைவர் அறையில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில், மேஜையில் இருந்த நீல நிற கைப்பையில் மூன்று பச்சை நிற கவர்களில் கட்டுக்கட்டாக ரூ.14 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. தலைவர் முன் அமர்ந்திருந்த வி.ஜி.என். நிறுவன ஊழியர் ராஜேஸ்வரன் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.25,000-ஐ எடுத்துக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் எதற்கென கேட்டபோது கூறப்பட்ட விளக்கங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், லஞ்சமாக வழங்க வந்த பணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டதாக DVAC தெரிவித்துள்ளது.

மேலும், தலைவர் கைப்பையில் இருந்த ரூ.32,200 சேர்த்து மொத்தம் ரூ.14.57 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில், வி.ஜி.என். நிறுவன ஊழியர்கள் ராஜேஸ்வரன், காமேஷ்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் 4,24,894 சதுர அடி நிலம் தொடர்பான ஒப்புதல் தீர்மான நகலை பெற வந்ததாகவும், மனைப்பிரிவு ஒப்புதலுக்காக ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, கெருகம்பாக்கத்தில் ஜெகதீஸ்வரி, ஊராட்சி பெண் துணைத் தலைவர் லைலா மற்றும் வார்டு உறுப்பினர் சந்தோஷ் ஆகியோரின் வீடுகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லஞ்ச விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது.