சர்வதேச விண்வெளிக் கொள்கைகளைப் பின்பற்றி, விண்வெளிக் கழிவுகளை குறைக்கும் முயற்சியில் இந்தியா முக்கிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. ஏவுதலுக்குப் பிறகு ராக்கெட்டின் மேல்பகுதியை வெறும் 9 மாதங்களில் பூமிக்கு மீள்நுழையச் செய்து அழித்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 2 அன்று, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து LVM3-M5 ராக்கெட்டின் மூலம் CMS-3 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட பின்னர், விபத்து அபாயம் ஏற்படாத வகையில் ராக்கெட்டின் மேல்பகுதி சுற்றுப்பாதையில் தொடர்ந்து சுழன்றது.
அந்த மேல்பகுதியின் இயக்கத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள MODR ரேடார் மூலம் இஸ்ரோ கண்காணித்தது. பின்னர் அது படிப்படியாக பூமியை நோக்கி இறங்கத் தொடங்கிய நிலையில், வளிமண்டலத்துடன் உராய்வால் ஏற்பட்ட கடும் வெப்பத்தில் பெரும்பாலான பகுதிகள் எரிந்து அழிந்தன.
மீதமிருந்த சில துண்டுகள் ஜூலை 30 அன்று அட்லான்டிக் பெருங்கடலில் விழுந்ததை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. பொதுவாக இத்தகைய ராக்கெட் பாகங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளிக் கழிவுகளாக இருந்து மற்ற செயற்கைக்கோள்களுக்கு மோதல் அபாயத்தை உருவாக்கும் நிலையில், சரியான திட்டமிடலால் குறுகிய காலத்திலேயே இதை முடித்ததாக இஸ்ரோ கூறியுள்ளது.





