ஜெய்ப்பூரில் 90 வயதான ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் என நடித்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ நாடகமாடி சைபர் குற்றவாளிகள் ரூ.2.50 கோடி மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரிக்கு ஜூலை 28 அன்று அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் தன்னை மும்பையைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரி என அறிமுகப்படுத்தி, அவரது வங்கி கணக்கு மூலம் ரூ.50 கோடி ஹவாலா பரிமாற்றம் நடந்ததாக கூறி கைது செய்வதாக மிரட்டியதாகவும், குடும்பத்தினரிடம் தெரிவிக்கக் கூடாது என எச்சரித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மற்றொரு நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தன்னை ரிசர்வ் வங்கி மேலாளர் என கூறியுள்ளார். ஹவாலா பணம் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, பண்டாரியின் முதலீடுகள் மற்றும் நிதி ஆவண விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது.

மிரட்டலால் அச்சமடைந்த பண்டாரி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார். விசாரணைக்கு உதவுவதாக கூறி, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு மோசடி கும்பல் அறிவுறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 3 முதல் 10 வரை, தனது எஸ்.பி.ஐ. கணக்கிலிருந்து ரூ.2,50,51,000-ஐ பல கணக்குகளுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் பி.பி.எப். கணக்கிலிருந்தும் பணம் மாற்றச் சொன்னபோது, ஜெய்ப்பூர் ஜோஹரி பஜார் எஸ்.பி.ஐ. கிளைக்கு சென்ற அவர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் வங்கி மேலாளர் பரிமாற்றத்தை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து உறவினர் ரவீந்திர சிங் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.