காவிரி நீர் விவகாரத்தை முன்வைத்து கர்நாடகாவில் நேற்று அறிவிக்கப்பட்ட மாநிலம் தழுவிய முழு அடைப்பு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதாக பாதிக்காமல் தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து, கன்னட சலுவளி வாட்டாள் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த ‘பந்த்’க்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த சில கன்னட அமைப்புகள் மற்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, அரசின் வேண்டுகோளை ஏற்று பின்னர் ஆதரவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.
அதிகாலை முதலே பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், கார்கள் வழக்கம்போல் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தன; கடைகளும் பெரும்பாலும் செயல்பட்டன. தமிழக அரசு பேருந்துகளும் தடையின்றி இயக்கப்பட்டன.
பெங்களூரு டாலர்ஸ் காலனியில் வீட்டின் முன் வாட்டாள் நாகராஜ் வாயில் பிளாஸ்டர் ஒட்டி நுாதன போராட்டம் நடத்தினார். பின்னர் போராட்டத்துக்கு செல்ல முயன்ற அவரை வீட்டின் வாசலில் காத்திருந்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவிரி நீர் படுகை பகுதிகளான மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகரில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்; மாண்டியா நகரில் சில இடங்களில் காலை கடைகள் மூடப்பட்டு, மதியத்திற்கு பின் திறக்கப்பட்டன.
தமிழக–கர்நாடக எல்லையிலும் இரு மாநில போலீசார் பாதுகாப்பை அதிகரித்தனர். காலை 9 மணியளவில், கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அத்திப்பள்ளி பகுதியில் தமிழக வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.





