புதுடில்லி: அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு சத்து உள்ள பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள் கட்டாயப்படுத்துவதில் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தயக்கம் காட்டுவது ஏன் என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாக்கெட் உணவுகளில் இத்தகைய எச்சரிக்கை லேபிள்களை ஒட்ட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

ஒழுங்குமுறை அமைப்பின் மீது அழுத்தம் இருப்பதை நீதிமன்றம் புரிந்துகொள்வதாக கூறியபோதும், அதற்காக மக்களின் ஆரோக்கியத்தை புறக்கணிக்க முடியாது என்றும், நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியமாக எடுத்துக்கொள்கிறீர்களா என்றும் அமர்வு கேள்வி எழுப்பியது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிரிஜேந்தர் சாஹர், பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள் நடைமுறைப்படுத்துவது சிரமம் என்றும், பல பாரம்பரிய இந்திய உணவுகளில் இயல்பாகவே அதிக உப்பு அல்லது கொழுப்பு இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வணிக நலனை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம்; குறிப்பாக வளரும் குழந்தைகளின் நலன் முதன்மை என வலியுறுத்தினர்.

எச்சரிக்கை லேபிள் தொடர்பாக அரசு தாமாகவே முடிவெடுக்க வேண்டும்; தவறினால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் அமர்வு தெரிவித்தது. இறுதி முடிவை தெரிவிக்க மத்திய அரசுக்கும் FSSAI-க்கும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.