சென்னை தலைமைச் செயலகம் அருகே, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் பொதுமக்களை குறிவைத்து சில இடைத்தரகர்கள் ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தலைமைச் செயலகத்தில் மனு கொடுத்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக இந்த வருகை அதிகரித்துள்ளதாகவும், ஒரு நாளுக்கு சராசரியாக 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, மனு எழுதித் தரும் நபர்களும் அதிகரித்து, தலைமைச் செயலகம் எதிரே உள்ள பூங்காவில் அமர்ந்து மனுக்கள் எழுதித் தருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலை பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் நடமாட்டம் தொடங்கியதாகவும், அவர்கள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து, “அதிகாரிகளை தெரியும்”, “மனுவை நேரடியாக கொடுத்து விடுவோம்”, “பிரச்னையை தீர்த்து வைப்போம்” என கூறி ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இவ்வாறு ஏமாற்றும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.