கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசு பணிநியமனங்களை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணிநியமன உத்தரவுகளை வழங்கியது. அந்த உத்தரவுகளை முதல்வர் விஜய் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நியமனங்களை எதிர்த்து மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிலர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வு, பணிநியமனங்களை ரத்து செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி போன்ற உதவிகள் வழங்கப்படலாம் என கருத்து தெரிவித்தது.
இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், வேலைவாய்ப்பு தொடர்பான பொதுநல வழக்கு தக்கதல்ல என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது; மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
நீதிபதிகள் பர்திவாலா, வினோத் சந்திரன் அமர்வு, ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பியது. கரூர் நெரிசல் சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் அமர்வு குறிப்பிட்டது.





