தென்காசி அருகே புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம் கேட்டும் பெற்றும் உள்ளதாக கூறப்படும் மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் (DVAC) கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்த காளிராஜ் (32), தனது தந்தை ராஜா பெயரில் உள்ள பழைய வீட்டை புதுப்பித்த பின்னர், அதற்கு புதிய மின் இணைப்பு பெற மின்வாரிய அலுவலகத்தை அணுகியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பணிக்காக வணிக ஆய்வாளர் கருப்பசாமி (53) என்பவரை தொடர்பு கொண்ட போது, புதிய இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம் தருமாறு அவர் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் வழங்க விரும்பாத காளிராஜ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.2,000 பணத்தை காளிராஜ் வழங்கினார். பணத்தை கருப்பசாமி பெற்றுக் கொண்ட தருணத்தில், அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. பால் சுதர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைதுக்குப் பின்னர், ஆய்வாளரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.