தமிழகத்தில் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள், கடை நடத்தும் செலவுகளுக்கான அரசின் மானியம் நிலுவையில் இருப்பதால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ஊழியர் தரப்பு தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் 35,000 ரேஷன் கடைகள் கூட்டுறவு அமைப்புகள் மூலம் இயங்குகின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் இக்கடைகளின் வாடகை, மின் கட்டணம், போக்குவரத்து செலவு போன்றவற்றை சமாளிக்க ஆண்டுக்கு சராசரியாக ரூ.350–400 கோடி மானியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த மானியம் முழுமையாக வழங்கப்படாமல், இதுவரை ரூ.700 கோடி வரை நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் பல கூட்டுறவு சங்கங்கள் சிரமப்படுகின்றன.
தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் வெங்கடாசலபதி, 2021–22 வரை மானியம் முழுமையாக வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் முழுத் தொகை விடுவிக்கப்படவில்லை என்றும் கூறினார். முதியவர்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கான செலவுத் தொகையும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டு, கூட்டுறவு துறை மானிய கோரிக்கையில் நிலுவை ரூ.700 கோடியை அறிவித்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.





