தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு, மொத்தம் 821 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, குரூப்-2ல் 41 பணியிடங்களும், குரூப்-2ஏவில் 780 பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன. தொழிலாளர் உதவி ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் இதில் அடங்கும்.
ஆனால் குரூப்-2 பதவிகளில் சில பிரிவுகளுக்கு ஒற்றை இலக்க அளவிலேயே காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 14 பணியிடங்களில் இவ்வாறு குறைந்த எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளதாகவும் தேர்வர்கள் மற்றும் சில அரசு ஊழியர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் மேல் காலியிடங்கள் இருப்பதாகவும், இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். குரூப்-4, குரூப்-2 போன்ற அதிக போட்டி உள்ள தேர்வுகள் மூலம் 2,000க்கும் மேல் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்த்த நிலையில், இப்போது 821 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வந்தது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்தனர். குரூப்-2 தேர்வுக்கு சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்பதால், குறைந்த அளவிலான பணியிடங்கள் அறிவிப்பு கவலை அளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.





