சென்னை: 80வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று தமிழகமெங்கும் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் பங்கேற்று, தங்களின் குரல் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். கருத்துகளை முன்வைத்து தீர்வுகளை உருவாக்கி, கிராம வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், காலை 10 மணி முதல் தமிழகத்தில் 12,525 கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக கூறினார். ‘வீ த லீடர்ஸ்’ தன்னார்வலர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்றும், உள்ளூர் மக்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கிராம சபையை அரசியல் மேடையாகவோ, போட்டி–பொறாமை காரணமாக சண்டை போடும் தளமாகவோ மாற்றாமல், கிராமப்புற வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ விவாதத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறினார். தமிழக அரசு நாளைய கூட்டத்தில் 10 விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என அறிவித்துள்ளதாகவும், அதில் பொது நிதி வரவு–செலவு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தூய்மையான குடிநீர் விநியோகம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் மற்றும் வேளாண்மை தொடர்பான விவாதங்கள் உள்ளிட்டவை இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கிராமப் பிரச்னைகளை கூட்டத்தில் எடுத்துப் பேசி மக்களை ஒருங்கிணைத்து, அஜெண்டாவாக கொண்டு வந்து கையெழுத்துகள் பெற்று மாநில அரசுக்கு பரிந்துரையாக அனுப்பும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். தீர்மானம் நிறைவேற்ற குறைந்தபட்ச பங்கேற்பு தேவை என்றும், மக்கள் தொகைக்கு ஏற்ப 50 முதல் 300 பேர் வரை பங்கேற்றால்தான் தீர்மானம் போட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், பிரதமர் மோடி கூறியபடி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.