அருணாச்சல் பிரதேசத்தில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்கள் 5 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பசு பாணி ராணுவ முகாமில் இருந்த இரண்டு முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 7 வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியதாகவும், அவர்களில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் கியோஜாரிங்–பியாச்சிங் சாலை வெட்டும் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இதில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட தகவலின்படி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 235 சாலைகள், 40 பாலங்கள், 75 சிறு பாலங்கள், 373 நீர் விநியோக அமைப்புகள், 161 மின் இணைப்புகள், 823 மின் கம்பங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், அரசு கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன.
பருவமழை தொடர்வதால், வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





