பெங்களூரில் வீடுகளின் முன் உள்ள பொதுச் சாலைகளில் கார்கள் நிறுத்துவதற்கு ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. சாலையோர நிறுத்தம் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாகக் கூறி, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (GBA) வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது.
வரைவு திட்டத்தின் படி, குறிப்பிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களைத் தவிர, மற்ற வாகனங்களுக்கு சாலைகளில் இனி இலவச நிறுத்தம் வழங்கப்படாது. நகர சாலைகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவில் மணிக்கு ரூ.80, ‘பி’ பிரிவில் ரூ.60, ‘சி’ பிரிவில் ரூ.40 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரத்துக்கு மேல் நிறுத்தினால் கட்டணம் உயரக்கூடும் என்றும், அதிகபட்சமாக ஒன்றரை மடங்கு வரை உயர வாய்ப்புள்ளதாகவும் வரைவு குறிப்பிடுகிறது. பொதுச் சாலைக்கு மாற்றாக வாகன நிறுத்த வளாகங்களில் மாதக் கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000–2,000 மற்றும் கார்களுக்கு ரூ.2,000–4,000 வரை வசூலிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை நிறுத்தினால் மாதக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நகரில் உள்ள காலியான நிலங்களை பொதுவாக வாகன நிறுத்தமாக மாற்ற உரிமையாளர்கள் முன்வந்தால், அந்த இடத்திற்கு 35 ஆண்டுகள் வரை சொத்து வரி விலக்கு வழங்கப்படும் என்ற ஊக்கமும் இடம் பெற்றுள்ளது.
வீட்டு முன் சாலையில் சொந்த கார்கள் நிறுத்துவதற்கு சிறிய கார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000, செடான் கார்களுக்கு ரூ.20,000, எஸ்.யு.வி. கார்களுக்கு ரூ.25,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற வாகனங்கள் செல்ல போதிய இடவசதி உள்ளதா என்பதை GBA மார்ஷல்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகே அனுமதி வழங்கப்படும். இந்த வரைவு குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்; அவை பரிசீலிக்கப்பட்ட பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.





