இளைஞர்களை சரியான பாதையில் வழிநடத்தினால் நாடு பெரும் அளவில் பயன் அடையும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். அவர் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

இளைஞர்கள் மக்கள்தொகையில் முக்கிய பங்கைக் கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லையெனில் எதிர்காலத்தில் சமூகத்திற்கு சுமையாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், இன்னும் 30 ஆண்டுகளில் இன்றைய இளைஞர்களே முதியவர்களாகிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

தங்களைப் பற்றியே சிந்திக்காமல், எதிர்கால சந்ததியினரின் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பாரதம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இளைஞர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பாரதத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எவ்வளவு முயற்சி தேவை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்; அது நமது கடமை என்றும் அவர் தெரிவித்தார். உலகின் பல நாடுகள் பொருளாதாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன; ஆனால் பாரதத்தின் பார்வை பணம் சம்பாதிப்பதோடு மட்டும் முடிவதில்லை என்றும் கூறி, தடைகளை தைரியமாக எதிர்கொண்டு உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று இளைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார்.