நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு தயாரிப்புப் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பையும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என தகவல். 2011-ல் 29 கேள்விகள் இருந்த படிவத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை 40 கேள்விகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பாளர்கள் மதம் தொடர்பான விவரங்களையும், ஒருவர் பட்டியல் இனத்தவரா அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்பதையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப விவரங்களையும் சேகரிக்கும் வகையில் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற அடையாள விவரங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான தகவல்களையும் பதிவு செய்யும் வகையில் கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாதி தொடர்பான கேள்வியில் மக்கள் கூறும் பெயரை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டாலும், படிவங்களில் ஜாதிப் பெயர்கள் இடம்பெறாத வகையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தெலுங்கானா மற்றும் பீஹாரில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என அந்தக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.




