தெலுங்கானா ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கலையின் 2026 பட்டதாரிகளை வழக்கறிஞர்களாக பதிவு செய்யாமல் நிறுத்துமாறு இந்திய பார் கவுன்சில் (BCI) வெளியிட்ட சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று கடுமையாக விமர்சித்தது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த போராட்டம் தொடர்பான விசாரணை முடியும் வரை 2026ல் தேர்ச்சி பெறும் மாணவர்களை மாநில பார் கவுன்சில்கள் பதிவு செய்யக் கூடாது என BCI அறிவுறுத்தியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த சுற்றறிக்கையை BCI சில மணி நேரங்களிலேயே திரும்பப் பெற்றது. இருப்பினும், அந்த சுற்றறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது; அதை அவசர வழக்காக நீதிமன்றம் விசாரித்தது.

விசாரணையில், இது “முற்றிலும் தேவையற்றது” என தலைமை நீதிபதி குறிப்பிட்டார். தானும் ஒரு காலத்தில் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் என கூறிய அவர், “இது எனக்கும், மாணவர்களுக்கும் இடையேயான விவகாரம்; இதில் தலையிட பார் கவுன்சிலுக்கு என்ன உரிமை?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், நல்சார் மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு, சுற்றறிக்கை தொடர்பாக பதிலளிக்குமாறு BCI-க்கு நோட்டீஸ் அனுப்பியது.