தமிழகத்தை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவது “விடுதலைக்கு சமமான விஷயம்” என முதல்வர் விஜய் தெரிவித்தார். அந்த இலக்கை நோக்கி தனது அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக விஜய் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. விழாவில் நடிகை திரிஷா, அவரது தாயார் உமா, முதல்வரின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உரையில், தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்த அவர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். மக்கள் ஒன்றிணையும் போது ஜாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகள் உடைந்து, அதுவே “உண்மையான சுதந்திரம்” எனவும், தமிழகம் படிப்படியாக முன்னேறி வருவதாகவும் கூறினார்.
ஆட்சியின் முன்னுரிமைகள் குறித்து பேசுகையில், சமூக நீதி, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கலாசாரம் இல்லாத சூழல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மாநில உரிமைகளுக்கு எதிரான முடிவுகள் அல்லது தமிழகத்திற்கு எதிரான கொள்கைகள் வந்தால் அரசு எப்போதும் எதிர்க்கும் என்றும், மக்களுக்கு பயனுள்ள பழைய திட்டங்களை தொடர்வதாகவும் கூறினார். அம்மா உணவகம் தொடரும்; காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நவீன தொழில்நுட்பம் மூலம் கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் இருப்பதாகவும், கோவில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு பொதுமக்கள் அறிய ஆன்லைனில் பதிவேற்றப்படுவதாகவும் கூறினார். லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களுக்கு புதிய வாட்ஸ் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், “மக்களே ஆட்சியாளர்கள்” என கூறி, மக்கள் அரசுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





