டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக புறக்கணித்துள்ளனர். இதற்கு சொத்தைக் காரணங்கள் உள்ளிட்ட விளக்கங்களை கட்சி தரப்பினர் முன்வைத்துள்ளனர்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மரபு என கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டும் கடந்த ஆண்டும் இருவரும் செங்கோட்டையில் நடந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
கார்கே வயது முதிர்ந்தவர் என்பதால் நீண்ட தூரம் நடக்கவும் படி ஏறவும் சிரமம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதை எதிர்த்து பா.ஜ.க தரப்பினர், அவர் வழக்கமாக பார்லிமென்டில் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதாக சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.
மேலும், 2024 சுதந்திர தின விழாவில் ராகுலுக்கு இரண்டாம் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதாகவும், அதை அவமதிப்பாகக் கருதி அவர் விழாவை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஒலிம்பிக் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு முதல் வரிசையில் இடம் வழங்க வேண்டியிருந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்தாலும், காங்கிரஸ் அதை ஏற்கவில்லை; அதே விவகாரம் தொடர்ந்து அடுத்த ஆண்டுகளிலும் புறக்கணிப்புக்கான காரணமாக முன்வைக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





