தி.மு.க.வில் இளம் தலைமுறைக்கு அதிக வாய்ப்பு வழங்கும் நோக்கில், அமைப்பு மறுசீரமைப்புக்கான புதிய விதிகளை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பல மூத்த மாவட்டச் செயலர்கள் கவலையிலும் அதிர்ச்சியிலும் உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்த கள ஆய்வு குழு மற்றும் மறுசீரமைப்பு குழு ஆகியவை ஸ்டாலினிடம் அறிக்கைகள் அளித்ததாகவும், அதில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி கட்சியை புதுப்பிக்க பரிந்துரைகள் இடம்பெற்றதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர்கள் நேரு, வேலு, எம்.பி.க்கள் கனிமொழி, ராஜா மற்றும் சபரீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒருவர் என்ற கணக்கில் 117 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படலாம் என தகவல். குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து மாவட்டச் செயலர் பதவி மாற்றப்படலாம்; ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களும் இடமாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு 60 வயது வரை என்ற வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல். இதனால் சுமார் 24 மூத்த நிர்வாகிகள் பாதிக்கப்படலாம்; அதே நேரத்தில் 40க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு மாவட்டச் செயலர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான ஒப்புதல் ஆகஸ்ட் 22 அன்று நடைபெறும் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.