புதுடில்லி: சிந்து நதிநீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. பாகிஸ்தான் தரப்பில் வந்த கடும் எதிர்வினைகளுக்கிடையே இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ததாக கூறப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதமும் அதற்கு ஆதரவும் நிறுத்தப்படும் வரை இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது என இந்தியா உறுதியாக தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியா ஒப்பந்தத்தை “ஒருதலைப்பட்சமாகவும் சட்டவிரோதமாகவும்” நிறுத்தியதாக குற்றம்சாட்டியது. தண்ணீர் விவகாரத்தில் சமரசம் இல்லை என்றும், இந்தியா “சரியான பாதைக்கு” வராவிட்டால் பதிலடி கொடுப்போம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டில்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால், சிந்து நதிநீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் சென்ற நார்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பர்த் எய்ட் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கும் அவர் பதிலளித்தார். ஜம்மு-காஷ்மீர் முழுப் பகுதியும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதிகள் என்றும், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த காஷ்மீரில் நடைபெறும் அட்டூழியங்கள் மற்றும் அந்த பகுதியை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.