கர்நாடகா சாம்ராஜநகர் மாவட்டத்தில் வனத்துறையினருடன் நடந்த என்கவுன்டரில் சட்டவிரோத வேட்டைக்கு சென்றதாக கூறப்படும் மூவர் உயிரிழந்தனர்.

காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஹனூர் வனப்பகுதியில் ஷாக்யா அருகே நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மானை வேட்டையாடி அதன் இறைச்சியைப் பங்கிடும் போது, அப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.

வனத்துறையினரை நோக்கி அந்தக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக வனத்துறையினரும் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் தப்பியோடிய நிலையில், மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்துக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த பொருட்களை வெளியே வீசி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக அலுவலகத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.