கோஹிமா: ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவது அல்லது இசைப்பதை கட்டாயமாக்கும் எந்த உத்தரவும் ஏற்க முடியாதது என நாகாலாந்து கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன் ‘வந்தே மாதரம்’ கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டதாக செய்தி கூறுகிறது.

மேலும், அந்த பாடலை அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியிட்ட அறிக்கையில், நாகாலாந்து பாப்டிஸ்ட் திருச்சபை கவுன்சிலின் பொதுச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள், தேசிய சின்னங்கள், தேசபக்தி உணர்வுகள் மற்றும் அரசியலமைப்பை முழுமையாக மதிப்பதாக தெரிவித்தனர். ஆனால் தேசபக்தியை கட்டாயப்படுத்தி உருவாக்க முயல்வதை ஏற்க முடியாது என்றும் கூறினர்.

இந்திய அரசியலமைப்பு சுதந்திரம், சமத்துவம், பன்முகத்தன்மை ஆகிய அடிப்படைகளில் அமைந்துள்ளது; தேச ஒற்றுமையை ஒரேமாதிரி தன்மையுடன் ஒப்பிடக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு மற்றும் பொது நிறுவனங்கள் நிதானத்துடனும் உணர்வுபூர்வமாகவும் செயல்பட வேண்டும்; எனவே ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயப்படுத்த முடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.