சென்னை: சமூக வலைதளத்தில் முருகப்பெருமானை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படும் தவெக ஆதரவாளரை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜயிடம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சிக்கு வந்த நாள் முதலே தவெக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஒரு மதத்தைப் பற்றி பெருமையாக பேசுவதோடு, பிற மதங்களையும் அன்னைத் தமிழையும் இழிவுபடுத்திப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதையே பின்பற்றி ஒரு ஆதரவாளர், முருகப்பெருமானையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் மிகக் கீழ்த்தரமாக இழிவுபடுத்தி வருவதாகவும் கூறினார்.
மதநல்லிணக்கம் குறித்து பேசும் முதல்வர், இத்தகைய பதிவுகளைப் பார்த்தும் மவுனம் காப்பது ஏன் என்றும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்றும் நயினார் கேள்வி எழுப்பினார். நடவடிக்கை இல்லாதது, இத்தகைய நபர்களை அரசு காப்பாற்ற முயலுகிறதா என்ற சந்தேகத்தை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
கோடிக்கணக்கான மக்களின் ஆராதனைக்குரிய முருகப்பெருமானை இழிவுபடுத்திய நபர்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தவெக அரசு பெரிய போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.




