சர்வதேச அரங்கில் இந்தியா குறித்து உலக நாடுகள் கொண்டுள்ள பார்வை கலந்ததாக இருப்பதாக, 36 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மொத்தமாக 45% பேர் இந்தியாவை சாதகமாகப் பார்த்ததாகவும், 41% பேர் எதிர்மறையான கருத்துகளைப் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ ஆய்வு நிறுவனம் ‘பியூ’ இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை 42,000க்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அண்டை நாடுகளில் இலங்கையில் இந்தியாவுக்கு 79% பேர் சாதகமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதேபோல் பிரிட்டன் மற்றும் கென்யாவில் தலா 71%, ஜெர்மனியில் 63%, இத்தாலியில் 56% மற்றும் ஸ்வீடனில் 55% பேர் இந்தியாவை நேர்மறையாகக் கண்டதாக ஆய்வு கூறுகிறது.
வங்கதேசத்தில் இந்தியாவை 42% பேர் சாதகமாகப் பார்த்த நிலையில், 51% பேர் எதிர்மறை கருத்துகளை தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்ததுடன் இந்த எதிர்ப்பு மனநிலை தொடர்புடையதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில் 91% பேர் இந்தியாவுக்கு எதிர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் இந்தியாவை 45% பேர் மட்டுமே சாதகமாகக் கண்டதாகவும், இது 2023ல் இருந்த 51% இலிருந்து குறைந்ததாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.





