புதுடில்லி: இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான இன்ஜினை இந்தியாவிலேயே தயாரிக்க ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்தியாவில் போர் விமான உற்பத்தியில் உதிரி இன்ஜின் கிடைப்பது நீண்ட காலமாக பெரிய சவாலாக இருந்து வந்ததாகவும், பல நேரங்களில் வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியாவில் ஒரு வான்வெளி எரிவாயு (கேஸ் டர்பைன்) வளாகம் அமைப்பது குறித்து ஆய்வு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மையம் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, சோதனை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, இன்ஜின் தரத்தையும் நீண்டகால பராமரிப்பு ஆதரவையும் உறுதி செய்வதை இலக்காகக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி மூலம் ரோல்ஸ் ராய்ஸின் விமான இன்ஜின் தொழில்நுட்ப அனுபவமும், ரிலையன்சின் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் திட்ட செயலாக்க திறன்களும் ஒன்றிணைக்கப்படும். ஐந்தாம் தலைமுறை போர் விமானத் திட்டத்திற்கான இன்ஜினை உள்நாட்டிலேயே உருவாக்குவதே முக்கிய நோக்கம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.