மஹாராஷ்டிராவில் 2022ல் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் தொடர்பாக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அந்த உரையில், மறைந்த சுதந்திர போராட்ட வீரரும் ஹிந்து மகாசபை தலைவருமான வீர சாவர்க்கர் குறித்து ராகுல் விமர்சித்து, அவர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து ஓய்வூதியம் பெற்றதாகவும், அவர்களின் சேவகராக செயல்பட்டதாகவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பேச்சுக்கு எதிராக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே லக்னோ மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து ராகுலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ராகுல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் முன்பே நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர சட்டப்படி தேவையான மாநில அரசின் முன்அனுமதி பெறப்படவில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில், லக்னோ நீதிமன்றம் அனுப்பிய சம்மனையும் ராகுலுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கையும் முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டது.





