இந்தியன் சூப்பர் லீக் (ISL) அணியான ஜாம்ஷெட்பூர் எப்.சி.யில் டாடா ஸ்டீல் வைத்திருந்த 100 சதவீத பங்குகளை, கோவாவை சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு ரூ.100 என்ற அடையாளத் தொகைக்கு விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரிவர்த்தனை, ஜாம்ஷெட்பூர் எப்.சி. செயல்படும் ‘ஜாம்ஷெட்பூர் கால்பந்து மற்றும் ஸ்போர்ட்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் டாடா ஸ்டீல் வைத்திருந்த 4.08 கோடி பங்குகளை மாற்றுவதைக் குறிக்கிறது. ஜாம்ஷெட்பூர் எப்.சி. 2017ஆம் ஆண்டு ISL-ல் அறிமுகமானது.
அந்த நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு வருவாய் ரூ.32.23 கோடியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த மார்ச் நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்த கடன்கள் அதன் சொத்துகளின் மதிப்பை விட ரூ.5.8 கோடி அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலையை முன்னிட்டு, ரூ.100 என்ற பெயரளவு தொகைக்கு பங்குகளை சர்ச்சில் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு மாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த பரிவர்த்தனைக்கு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் ஒப்புதல்கள் தேவை; அனுமதிகள் கிடைத்தால் வரும் 31ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





