சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், ‘யார் சீனியர்’ என்ற தகராறைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பள்ளி முடிந்து நண்பர்களுடன் வெளியே வந்த மாணவர், அருகிலுள்ள பஸ் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்த போது, 20 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதாக போலீசார் கூறினர்.
தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் மாணவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் பிளஸ் 1 மாணவர் ஒருவருக்கும், உயிரிழந்த மாணவரின் நண்பருக்கும் இடையே ‘யார் சீனியர்’ என்ற விவகாரத்தில் முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், ஆசிரியர்கள் இருவரையும் அழைத்து கண்டித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த தரப்பைச் சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் படித்து தோல்வியடைந்த முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 20 பேருடன் பள்ளி வெளியே காத்திருந்து தாக்க திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். சம்பந்தப்பட்ட மாணவர் அன்று பள்ளிக்கு வராததால், அவரது நெருங்கிய நண்பரை இழுத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும், தலைமறைவாக உள்ள பிளஸ் 1 மாணவர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.





