சென்னை: விபத்து தடுப்பு நடவடிக்கையாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க மண்டல ஐ.ஜி.க்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து தான் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விதி அமலில் இருக்கும் நிலையில், சில நேரங்களில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே அதை மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மீறல்கள் பொதுமக்களால் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவதால், காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரவின்படி, ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட போலீசாரின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்ய வேண்டும். அந்த நபர் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய புதிய ஹெல்மெட் வாங்கி கொண்டு வந்த பிறகே வாகனம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், காலை 7:00 மணிக்கு பணிக்கு வரும் போது ஹெல்மெட் அணிந்து வந்ததை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வந்தது தெரிய வந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, ஒரு நாள் ஆப்சென்ட் போட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றால் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





