சீன தயாரிப்புகளுக்கு அமெரிக்கா விதிக்கும் கூடுதல் வரிகளைத் தவிர்க்க, இந்தியா உட்பட 40க்கும் மேற்பட்ட மூன்றாம் நாடுகள் வழியாக சீனப் பொருட்கள் மறு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2018ல் சீனாவின் “நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்” எனக் கூறி கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, சீனாவிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய சில சரக்குகள் குறைந்த வரி உள்ள நாடுகள் வழியாக திருப்பி அனுப்பப்படும் போக்கு அதிகரித்துள்ளது.
“தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம்” என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கையை அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தயாரித்துள்ளார். இதில், குறைந்த அளவு பதப்படுத்துதல், லேபிள் மாற்றம், விலைப்பட்டியல் திருத்தம் அல்லது ஏற்றுமதி ஆவணங்களில் மாற்றம் போன்ற வழிகளில் சீனப் பொருட்கள் வேறு நாட்டில் தயாரிக்கப்பட்டவை போல தோற்றமளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பில் இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, தைவான் உள்ளிட்டவை சீனாவுடன் அதிக வர்த்தக தொடர்புடைய நாடுகள்/பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, சென்னை–புனே–ஆமதாபாத் போன்ற தொழில் உற்பத்தி முனையங்கள் சீனாவுடன் தொடர்புடைய பம்புகள், கம்ப்ரசர்கள் உள்ளிட்ட பொருட்களின் விநியோகத் தொடரமைப்புடன் இணைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இத்தகைய பொருட்கள் இந்தியா வழியாக அமெரிக்காவுக்கு சென்றால், சின்சினாட்டி, டேட்டன், கொலம்பஸ் போன்ற பகுதிகளில் அதே வகை பொருட்களை தயாரிக்கும் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது. மேலும், 2025ல் மெக்சிகோ, இந்தியா, வியட்நாம் ஆகிய மூன்று முக்கிய மறு ஏற்றுமதி மையங்கள் வழியாக சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு சுமார் ரூ.6.43 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் வந்திருக்கலாம் என மதிப்பிடுகிறது. இதை கண்டறிந்து தடுக்க அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான “டிடெக்டிவ் பார்டர்” என்ற கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.





