சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கியுள்ளார். விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைப்பின் சார்பில் மாதம் ஒரு சமூகப்பணி என்ற திட்டத்தின் கீழ், கடந்த மாதம் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இம்மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி கடற்கரைகள் மற்றும் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று மாலை 3:00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே பேரணி நடைபெறுகிறது. பேரணியில் அண்ணாமலை உரையாற்ற உள்ளார்; நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.





