உத்தரப் பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடந்ததாக கூறப்படும் காணிக்கை திருட்டு, நாடு முழுவதும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு இரண்டு நிர்வாகிகள் பதவி விலகியுள்ளனர்.
இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் போல ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படும் முறையை அயோத்தி ராமர் கோவிலிலும் கொண்டு வர அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. கோவில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ‘சிஇஓ’ பதவி அமைக்கப்பட உள்ளது.
இந்த பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதில் சுமார் 6,000 பேர் விண்ணப்பித்தனர். அதில் 16 பேர் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, இறுதியாக மூவர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் ஒருவர் ஐ.ஏ.எஸ்., ஒருவர் ஐ.பி.எஸ்., மேலும் ஒருவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது. 15 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளை விரைவில் கூடி, இந்த மூவரில் ஒருவரை தேர்வு செய்து ராமர் கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க உள்ளது; இதில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த திருட்டு விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் எழுப்பினாலும், அயோத்தியில் பெரிதாக பேசாமல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பா.ஜ.க. மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி வருவதும், அடுத்தாண்டு உ.பி. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாலும், உள்ளூரில் எந்தக் கட்சியும் விவாதிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.





