ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், இளைஞர்களே நாட்டின் முக்கியமான உழைக்கும் சக்தி எனக் கூறி, அவர்களின் ஆற்றலை சரியான திசையில் வழிநடத்தினால் நாடு பெரிதும் பயனடையும் என்று வலியுறுத்தினார்.

மகாராஷ்டிர மாநில நாக்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இந்தியா அடிப்படையில் வேறுபட்டது என்பதை இளைஞர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இந்தியா தன் சொந்த அளவுகோல்களை உருவாக்க வேண்டும்; பிற நாடுகளின் அணுகுமுறைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது எனவும் தெரிவித்தார்.

இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு பெரிய சொத்து என்றாலும், அதை சரியாக கையாளவில்லை என்றால் எதிர்காலத்தில் அது சமூகத்தின் மீது சுமையாக மாறலாம் என்று அவர் எச்சரித்தார். இன்றைய இளைஞர்களே நாளை நாட்டின் வருமானம் ஈட்டும் சக்தியாக மாறப் போகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும், வேலைவாய்ப்பு என்பது அலுவலகப் பணிகளுக்கு மட்டும் அல்ல; உடல் உழைப்பைச் செய்யும் தொழிலாளர்களும் அதில் அடங்குவர், அவர்களின் உழைப்புக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றார். தவறான பார்வையால் உலகம் தடுமாறுகிறது; சமநிலை கொண்ட பார்வையுடன் உலகிற்கு எதிர்கால பாதையை காட்டுவது இந்தியாவின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த புவியியல் பரப்பளவை கருத்தில் கொண்டு, கனடா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பின்பற்றும் அணுகுமுறைகளை அப்படியே நகலெடுக்க முடியாது என்றார். இந்தியாவின் பிரச்னைகளுக்கு தனித்துவமான சிந்தனை முறை தேவை; அதற்காக விஷயங்களை சரியாகப் புரிந்து கொண்டு ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.