பீஹாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) வெற்றிகரமாக நடத்தப்பட்டதே 2025 சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு உயர்வதற்கு வழிவகுத்ததாக தலைமை தேர்தல் கமிஷனர் (சிஇசி) ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

பீஹாரில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர், பாட்னாவில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசினார். நாட்டிலேயே சிறந்த எஸ்ஐஆர் பணிகள் பீஹாரில்தான் தொடங்கியதாக கூறிய அவர், திருத்தப் பணியின் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 70 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

2025 சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், அதில் பதிவான ஓட்டுப்பதிவு சுதந்திரத்திற்குப் பிந்தைய பீஹார் வரலாற்றிலேயே மிக உயர்ந்ததாகவும் அவர் கூறினார். மேலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகளின் பொதுத் தேர்தல்களில் பதிவான ஓட்டுப்பதிவை விடவும் இது அதிகம் எனவும் தெரிவித்தார்.

ஆண்களும் பெண்களும் பெருமளவில் வாக்களிக்க வந்ததாகவும், மாநிலத்தில் இதுவரை இருந்த சாதனைகளை இந்த ஓட்டுப்பதிவு முறியடித்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 67.25% ஓட்டுப்பதிவு பதிவானதாகவும், இது சுதந்திரத்திற்குப் பிறகு மாநிலத்தில் பதிவான அதிகபட்ச ஓட்டுப்பதிவு எனவும் தெரிவிக்கப்பட்டது.