சென்னையில் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

காலை 8.33 மணிக்கு நிகழ்விடத்திற்கு வந்த அவரை தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் பொதுத்துறை செயலர் சுந்தரவல்லி வரவேற்றனர். தென்னிந்திய பகுதிகளின் படைத்தலைவர் உள்ளிட்ட ராணுவம், கடற்படை, வான்படை, கடலோர காவல்படை உயரதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து காவல்துறையின் சம்பிரதாய அணி வணக்க மரியாதையை ஏற்றுக் கொண்டு, திறந்த ஜீப்பில் அணிவகுப்பை பார்வையிட்டார்.

உரையில், ஜாதி-மதப் பாகுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலைநாட்டும் அரசை அமைக்க மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க முழுவீச்சில் பணியாற்றி வருவதாகவும், ஊழலை சிறிதும் சகிக்காத மனப்பான்மையை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது “நமக்கான இன்னொரு சுதந்திரம்” என குறிப்பிட்ட அவர், தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற அரசு அதிகாரிகளும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பும் தொடரும்; அதே நேரத்தில் தமிழக உரிமைகளுக்கு எதிரான கொள்கை முடிவுகளை அரசு எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.

முந்தைய அரசுகள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் தொடர்வதாகவும், ஜெயலலிதா தொடங்கிய ‘அம்மா உணவகம்’ திட்டம் மேலும் மெருகேற்றப்படுவதாகவும், காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுவதாகவும் கூறினார். மேலும், “ஓட்டு போட்டாச்சு” என்று மக்கள் ஒதுங்காமல், இனிமேல் கூடவே இருந்து நல்ல திட்டங்களை முன்னெடுக்க துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.