லக்னோவில் முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலக்கை குறிவைத்து தாக்கும் தற்கொலை ட்ரோன் ‘திவ்யாஸ்த்ரா எம்.கே.3’ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையில் ஓடும் ஜீப்பிலிருந்து ஏவுதல் உள்ளிட்ட செயல்பாடுகளும் வெற்றிகரமாக நடந்ததாக கூறப்படுகிறது.
டிஜி ப்ரோபல்ஷன் உருவாக்கிய உள்நாட்டு ஜெட் இன்ஜின் மூலம் இயங்கும் இந்த ட்ரோன், திட்டம் தொடங்கிய ஒரு ஆண்டிற்குள்ளேயே முக்கிய கட்டத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயுதத்திற்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்யாமல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்களையே பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும் கூறினர்.
இது ஒரு சாதாரண சோதனைப் பறப்பைத் தாண்டி, இந்தியா தனது எல்லைக்குள் துல்லியமான தாக்குதல் அமைப்பை முழுமையாக வடிவமைத்து, தயாரித்து, இயக்க முடியும் என்பதற்கான சான்று என அதிகாரிகள் விளக்கினர். இது சுயசார்பு முயற்சியின் முன்னேற்றத்தை காட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதனுடன் தொடர்பாக, ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் அருகேயுள்ள சோதனைத் தளத்தில், ஆளில்லா வான்வழி வாகனத்திலிருந்து ஏவப்படும் துல்லியமான வழிகாட்டுதல் ஏவுகணையின் இறுதி கட்ட மேம்பாட்டுச் சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக முடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வெற்றிகரமான சோதனைகளுக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.





