புதுடில்லி: இந்திய கடற்படைக்கான பெரிய அளவிலான நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான திட்டம் குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம். இதற்காக பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (CCS) நடைபெற உள்ள கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட உள்ளது.

கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், கூடுதல் கப்பல்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ.70,000 கோடி மதிப்பில் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மசகான் டாக் ஷிபில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனம், ஜெர்மனியின் தைசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ் (TKMS) நிறுவனத்துடன் இணைந்து கப்பல்களை இந்தியாவிலேயே கட்டும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வர்த்தக விதிமுறைகள் தொடர்பான முடிவுகள் தாமதமானதால் இது நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போது இந்த திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவின் அனுமதி கிடைத்த பிறகு, ஒப்பந்தம் கையெழுத்தாகி கட்டுமான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்திய கடற்படையில் ஏற்கனவே ஜெர்மனியில் தயாரான நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. புதிய ஒப்பந்தம் மூலம் முதன்முறையாக ஜெர்மனியுடன் இணைந்து இந்தியாவிலேயே நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படுவதுடன், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் நீருக்கடிப் போர் திறன்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.