ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகள், அரிய வகை லார் கிப்பன் குரங்குகளை நீதிமன்ற அனுமதி பெற்று பறிமுதல் செய்ய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ரங்கநாதன் என்பவரின் பண்ணை வீட்டில் அந்த குரங்குகள் இருப்பதை காட்டும் வீடியோவை நடிகர் விக்ரம் வெளியிட்டதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.

விசாரணையில், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதன் அந்த குரங்குகளை வாங்கி வழங்கியதாகவும், சர்ச்சை ஏற்பட்ட பிறகு அவற்றை மீண்டும் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் வனத்துறை தெரிவித்தது. இதையடுத்து, கேசவநாதன் பண்ணை வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தி நோட்டீஸ் வழங்கினர்.

அதற்கு அவர், மணிப்பூரில் இருந்து குரங்குகளை வாங்கி வந்ததாகவும், அவற்றை பதிவு செய்ய வனத்துறையில் விண்ணப்பித்ததாகவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், வாங்கி வந்த மூன்று குரங்குகளில் ஒன்று இறந்ததை வனத்துறைக்கு தெரிவிக்காமல் அகற்றிய விவகாரத்திலும் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

வனத்துறை தரப்பில், கேசவநாதன் கேரளம் மற்றும் ஹைதராபாதில் இருந்து வாங்கிய 4 ஆப்ரிக்க பூனைகள் மற்றும் அவை ஈன்ற 3 குட்டிகள் என மொத்தம் 7 பூனைகளை பதிவு செய்துள்ளதாக கூறினர். ஆனால் லார் கிப்பன் குரங்குகளை வைத்திருந்தது தொடர்பான விதிமீறல் குறித்து அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் முடிவு செய்வர் என்றும், நீதிமன்ற அனுமதியுடன் குரங்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.