சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாடல்களுடன் தொடங்கியது. தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி தேசியக்கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கான பாடல்-நிகழ்ச்சி வரிசை குறித்து பதிவாளர் தீப்தி அறிவுநிதி வெளியிட்ட புதிய சுற்றறிக்கையில், முதலில் மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, அதன் பின் வந்தே மாதரம், பின்னர் கொடி ஏற்றுதல், கொடி ஏற்றிய பின் தேசிய கீதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசின் அறிவுரைப்படி இந்த வழிமுறை அமல்படுத்தப்பட்டதாகவும், சென்னை முதன்மை அமர்வு, மதுரை அமர்வு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்கள், நீதித்துறை பயிற்சி மையங்கள் ஆகியவற்றுக்கும் இது அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விழாவில், உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் உள்ள சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். மேலும் அவர்கள் சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

சிறப்பாக பணியாற்றிய உயர் நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் ஆகியோருக்கு தலைமை நீதிபதி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.