மும்பை: பான்மசாலாவை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் அமைந்த விளம்பரத்தில் நடித்ததாகக் கூறி, பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு மஹாராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே மாநில உணவு பாதுகாப்பு ஆணையராக பொறுப்பேற்றதற்கு பிறகு, துறையின் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என வேறுபாடு இன்றி ஆய்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2024ஆம் ஆண்டு பான்மசாலா தொடர்புடைய நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த ஏலக்காய் தயாரிப்புக்கான விளம்பரம் ஆய்வு செய்யப்பட்டபோது, மாநிலத்தில் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றுக்கு தடை செய்யப்பட்ட பான்மசாலா தொடர்புடைய நிறுவனத்தை ஊக்குவிப்பது போல அந்த விளம்பரம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஏலக்காய் விளம்பரம் பான்மசாலாவுடன் தொடர்புபடுத்தும் விதத்தில் இருப்பதால் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பொருளை மறைமுகமாக ஊக்குவிப்பதாகவும் துறை குற்றம்சாட்டியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களின்படி தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்; விளம்பரம் தடை செய்யப்படலாம்; மேலும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.