தூத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ள மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியுள்ளனர். இதனால், திட்ட முதலீடு தமிழகத்தை விட்டு ஆந்திராவுக்கு நகரலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

மத்திய அரசின் நிறுவனமான மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ், தூத்துக்குடியில் ₹15,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க, தமிழக வழிகாட்டி நிறுவனத்துடன் 2025 செப்டம்பரில் குஜராத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால், தூத்துக்குடியில் நிலம் ஒதுக்கீட்டில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்திற்கு பதிலாக ஆந்திராவில் முதலீடு செய்யலாம் என முன்பே கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இம்மாதம் 11ம் தேதி நடந்த சந்திப்பில், இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் கடல்சார் தொழில் துறை வளர்ச்சியில் ஆந்திரா பங்களிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தூத்துக்குடி திட்டத்துடன் தொடர்புடைய முதலீடு ஆந்திர மாநிலத்திற்கு செல்லக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.