காவிரியின் குறுக்கே முன்மொழியப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்திற்கு 2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டுவதே இலக்கு என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்துள்ளார். மாண்டியாவில் அவர் இதை கூறி, திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் கூறுகையில், விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்திற்குத் தேவையான நிலம் 12,500 ஏக்கர் என்றாலும் 20,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை என்றும், அதற்காக மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்பம் மற்றும் சட்டத் துறைகளின் அதிகாரிகள் விடாமுயற்சியுடன் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தினசரி பணிகளை கண்காணிக்க டில்லியில் இரண்டு நீர்ப்பாசன அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், 2027 ஆகஸ்டுக்குள் அடிக்கல் நாட்டுவதே இலக்கு என மீண்டும் வலியுறுத்தினார்.
தண்ணீர் திறப்புகள் குறித்து அவர் பேசுகையில், இம்மாத இறுதி வரை மழை தொடரும் என எதிர்பார்ப்பதால் செப்டம்பருக்குள் கேஆர்எஸ் அணை நிரம்பும் என எண்ணுவதாக தெரிவித்தார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காமல் வைத்திருப்போம் என்று கூறவில்லை என்றும், 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவு வந்தபோதும் அதைவிட அதிக நீர் வரத்து இருந்ததாகவும், தற்போது 12,000 கனஅடி நீர் திறக்க சொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 1,000 கனஅடி நீர் கபினியிலிருந்து வருவதாகவும் கூறினார்.





