டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வளர்க்கும் கன்றுகள் மற்றும் மயில்களுக்கு உணவளிக்கும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
டெல்லி 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பரந்து விரிந்த தோட்டம் உள்ளது. அங்கு மாடுகள், கன்றுகள் உள்ளிட்டவற்றை செல்லப்பிராணிகளாகப் பராமரித்து வருவதாகவும், அவற்றுடன் நேரம் செலவிடும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்பு, தனது இல்லத்தில் ஒரு மாடு கன்றுக்குட்டி ஈன்றது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். கன்றின் நெற்றியில் ஒளிரும் குறி இருந்ததாகக் கூறி அதற்கு ‘தீப்ஜோதி’ எனப் பெயரிட்டதாகவும், அந்த வீடியோ இணையத்தில் வைரலானதாகவும் செய்தி வெளியானது.
புதிய பதிவில், மாடுகளுக்கு பாசத்துடன் உணவளிப்பதும், மயில்களுக்கு கையிலேயே தானியம் கொடுப்பதும் காணப்படுகிறது. மேலும், தினமும் காலை “என் நண்பர்களுக்கு” உணவளிப்பது தன் அன்றாட வழக்கம் என்றும், செங்கோட்டைக்குப் புறப்படும்போது அவர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டது ஒரு சிறப்பு தருணமாக இருந்தது என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





