சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மையமாக வைத்து பல அறிவிப்புகளை வெளியிட்டார். இலவச போட்டித் தேர்வு பயிற்சி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பயிற்சி, விளையாட்டு திறமையை கண்டறியும் திட்டம் ஆகியவை இதில் இடம்பெற்றன.

தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் ‘நீட்’ வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த பின்னணியில், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்ததாக குறிப்பிடப்படுகிறது. 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

அடுத்த ஓராண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார். மேலும் 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் விளையாட்டுத் திறமையை கண்டறிய நாடு தழுவிய திறன் தேடல் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ என்ற இலக்கை நோக்கி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்; உரையில் ‘இளைஞர்கள்’ என்ற சொல்லை பலமுறை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.