சேலம்: அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, த.வெ.க. அரசின் முதல் 100 நாள் ஆட்சி செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, நிர்வாகத்தை விட விளம்பரமே அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டினார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரித்தார். தற்போது குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து சம்பா சாகுபடியும் பாதிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
கர்நாடகாவில் கபினி அணை நிரம்பியதால் உபரி நீரே திறக்கப்படுகிறது என கூறிய பழனிசாமி, இத்தகைய சூழ்நிலையிலும் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு கவலை காட்டவில்லை என்றும், செயல்படுத்தும் திறன் இல்லாத அரசாக இருப்பதாகவும் விமர்சித்தார்.
மேலும், பொய் வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்து, 100 நாளில் ‘ரீல்ஸ்’ போட்டு ‘ரீல்’ விட்டு மக்களை ஏமாற்றியதாக அவர் குற்றம்சாட்டினார். புதிய திட்டங்களை கொண்டு வராமல், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. காலத்தில் வந்த திட்டங்களின் பெயருக்கு முன் ‘வெற்றி’ என்ற சொல்லை மட்டும் சேர்த்து பெயர் மாற்றி அறிவிப்பது நியாயமா என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் விஜய் மாலை 5 மணிக்கு வீட்டுக்குள் சென்றால் மறுநாள் காலை வரை பார்க்க முடியாத நிலை எனவும், அறிவார்ந்தவர்கள் அலங்கரித்த சட்டசபை இன்று ‘சினிமா சட்டசபை’ போல மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.




