சண்டிகர்: முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறும் பஞ்சாபில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில், மாநிலக் கட்சியாக உள்ள ‘அகாலிதளம் வாரிஸ் தே’ பஸ்சி பதானா தொகுதிக்கான தனது வேட்பாளராக சத்வந்த் சிங்கை அறிவித்துள்ளது. இவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை சதியில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்ட கெஹர் சிங்கின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சி காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கட்சியாக குறிப்பிடப்படுகிறது. சீக்கிய மதத்திற்கும் பஞ்சாபின் உரிமைகளுக்கும் தியாகம் செய்ததாக கருதப்படும் குடும்பங்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிப்பதாக கூறும் கட்சி, அதே அடிப்படையில் பஸ்சி பதானா தொகுதியில் சத்வந்த் சிங்குக்கு வாய்ப்பு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் வந்தனர் என்பது குறித்து உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஒருகாலத்தில் தீவிரவாதத்தின் பிடியில் இருந்த பஞ்சாப் தற்போது அமைதியாக இருப்பினும், வரவிருக்கும் தேர்தல் அந்த அமைதியை பாதிக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.





